உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகத் திகழ்ந்த சீனா, தற்போது கடுமையான மக்கள் தொகைக் குறைவு மற்றும் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை சீன அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2025 ம் ஆண்டில் அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 140 கோடிக்கும் கீழ் குறைந்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட சுமார் 30 லட்சம் குறைவாகும். குறிப்பாக, பிறப்பு விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பதினேழு சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்ட ஒரு குழந்தை கொள்கை, தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவு அதிகரிப்பு போன்றவை இளைஞர்களிடையே குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வத்தைக் குறைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த மக்கள் தொகைக் குறைவைத் தடுக்க சீன அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குழந்தை பெற்றுக் கொள்ளும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3600 யுவான் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுவதுடன், மழலையர் பள்ளிகளுக்கான வரிக் குறைப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதே சமயம், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், கடந்த முப்பது ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த கருத்தடை சாதனங்களுக்கான வரி விலக்கை அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் காண்டம் உள்ளிட்ட கருத்தடை சாதனங்களுக்கு பதிமூன்று சதவீத மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த மக்கள்தொகை மாற்றங்கள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எதிர்கால வல்லரசு கனவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
