உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே தவறி விழுந்த தந்தை மற்றும் குழந்தையை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காசி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்திலிருந்து புறப்படத் தொடங்கியபோது, தனது பச்சிளம் குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி பயணி ஒருவர் ரயிலில் ஏற முயன்றுள்ளார்.
அப்போது நிலைதடுமாறி அவர் குழந்தையுடன் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியில் சரியத் தொடங்கியதைக் கண்டு அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் அலோக் மௌரியா தலைமையிலான நீது சிங், இந்திரஜித் மற்றும் நவீன் ஆகிய ஆர்பிஎப் வீரர்கள் நொடிப்பொழுதில் செயல்பட்டு, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இருவரையும் பத்திரமாக இழுத்து வெளியெடுத்தனர்.
प्रयाग स्टेशन पर आरपीएफ चलती ट्रेन में चढ़ने के दौरान फिसले एक यात्री,उसके छोटे बच्चे की जान बचाई।काशी एक्सप्रेस के छूटने के वक्त ड्यूटी पर तैनात रेलकर्मियों की सूझबूझ,साहस से बड़ा हादसा टला #OperationJeevanRakshak#RPF #RailwaySafety#PassengerSafety #IndianRailways#Prayagraj pic.twitter.com/gtriYideEo
— Alok Pandey (@AlokPandeyUP72) January 18, 2026
இந்த திக் திக் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களின் ரத்தத்தை உறையச் செய்துள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களின் இந்தத் துணிச்சலான செயலை வடக்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், பயணிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஓடும் ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என்றும், குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் தந்தை மற்றும் குழந்தை இருவரும் எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பியதால் அவர்கள் பின்னர் தங்களது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.
