விடுமுறை நாளில் கைக்குழந்தையுடன் சென்ற பெண் காவலர் ஒருவர், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸுக்காகச் சாலையைச் சீர்செய்து கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் ரங்கம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வருபவர் ஜெயா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது விடுமுறை நாளில், கைக்குழந்தையுடன் காக்கிநாடா – சாமர்லகோட்டா சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தச் சாலையில் எதிர்பாராத விதமாக மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

அந்த சமயத்தில், நோயாளிகளை ஏற்றி வந்த இரண்டு ஆம்புலன்ஸ்கள் நெரிசலில் சிக்கி நகர முடியாமல் தவித்தன. ஆம்புலன்ஸின் சைரன் ஒலித்தும் வாகனங்கள் நகர வழியில்லாத சூழல் நிலவியது. இதைக் கவனித்த ஜெயா, தான் பணியில் இல்லை என்பதையும், கையில் குழந்தை இருப்பதையும் பொருட்படுத்தாமல் உடனடியாகக் களத்தில் இறங்கினார்.

 

சுமார் 20 நிமிடங்கள் வரை, ஒரு கையில் தனது குழந்தையை அணைத்தபடி, மறு கையால் சைகை காட்டி போக்குவரத்தைச் சீர்செய்தார். இவரது முயற்சியால் ஆம்புலன்ஸ்கள் செல்லத் தனி வழி ஏற்படுத்தப்பட்டு, அவை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றடைந்தன.

இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் கைபேசியில் படம்பிடித்துச் சமூக வலைதளங்களில் பகிர, அது வைரலானது. பெண் காவலர் ஜெயாவின் இந்த அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டிய ஆந்திரப் பிரதேச காவல்துறை மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், அவருக்குச் சிறப்புச் செய்து கௌரவித்துள்ளனர்.