மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், தனது 5 வயது மகனை மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிட்டுக் கொன்ற தாய்க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஜோதி ரத்தோர் என்ற பெண் தனது பக்கத்து வீட்டு வாலிபருடன் நெருக்கமாக இருந்ததை அவரது மகன் ஜதின் பார்த்துவிட்டான். இந்த விபரத்தைத் தனது கணவரான காவலர் தியான் சிங்கிடம் சிறுவன் கூறிவிடுவான் என்ற பயத்தில், ஜோதி தனது பெற்ற மகனையே கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

​ஆரம்பத்தில் இது விபத்து என நம்பப்பட்டாலும், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் கொண்ட தியான் சிங், தனது வீட்டில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தார். மேலும், தனது மனைவியுடன் நடத்திய உரையாடல்களை ரகசியமாகப் பதிவு செய்தபோது, ஜோதி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த ஆதாரங்களுடன் காவல்துறைக்குத் தியான் சிங் அளித்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை நடைபெற்றது. ஜோதியின் கள்ளக்காதலன் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்ட நிலையில், ஜோதிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.