டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) முழுமையான உரிமையைக் கோரி அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கட்சியின் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு வேறு எவருக்கும் அதிகாரம் இல்லை என்றும், மீறி நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையும் சட்டப்படி செல்லாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அதிகாரப்பூர்வ கொடி மற்றும் சின்னம் தங்களுக்கே சொந்தம் என உரிமை கோரி மற்றுமொரு ரிட் மனுவையும் அவர் தாக்கல் செய்துள்ளார். கட்சியின் உள்விவகாரங்கள் மற்றும் கூட்டணி முடிவுகளில் பிறர் தலையிடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
