ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் (BBL) டி20 தொடரில், சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாபர் அசாம் இடையே வெடித்துள்ள ‘ஈகோ’ மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி தண்டர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, 11-வது ஓவரின் கடைசி பந்தில் பாபர் அசாம் ஒரு ரன் (Single) எடுக்க முயன்றார். அப்போது அவர் 40 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆனால், மறுமுனையில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் ரன் ஓட மறுத்து பாபரைத் தடுத்து நிறுத்தினார். அடுத்த ஓவரில் ‘பவர் சர்ஜ்’ விதியைப் பயன்படுத்தித் தானே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கில் ஸ்மித் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
பாபர் அசாமின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்ததே ஸ்மித்தின் இந்த முடிவுக்குக் காரணம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்மித் திட்டமிட்டது போலவே, அடுத்த ஓவரில் அவர் 32 ரன்களைக் குவித்து அதிரடி காட்டினார்.
ஸ்மித்தின் இந்தச் செயலால் தனது கௌரவம் பாதிக்கப்பட்டதாகக் கருதிய பாபர் அசாம், மிகுந்த அதிருப்தி அடைந்தார். தனக்கு வாய்ப்பு கிடைத்த அடுத்த ஓவரிலேயே அவர் ஆட்டமிழந்தார். அப்போது தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக மைதானத்தில் இருந்த பவுண்டரி குஷன்களை எட்டி உதைத்துவிட்டு பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து டிரெஸ்ஸிங் ரூமிற்குச் சென்ற அவர், ஸ்மித் தன்னை அவமானப்படுத்திவிட்டதாக சக வீரர்களிடம் புலம்பியுள்ளார். “ஸ்மித் என்னை மதிக்கவில்லை; ஒரு சீனியர் வீரருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அவர் தரவில்லை” என்று அவர் சக வீரர்களிடம் வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார்.
பாபர் அசாம் வருத்தத்தில் இருந்தாலும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஸ்மித்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “டி20 கிரிக்கெட்டில் ‘மேட்ச்-அப்’ (Match-up) என்பது மிக முக்கியம். ஸ்மித் தனக்குச் சாதகமான பந்துவீச்சாளரை எதிர்கொள்ள விரும்பினார். அதில் எந்தத் தவறும் இல்லை. அணியின் வெற்றிக்காக எடுக்கப்பட்ட முடிவு இது” என்று விளக்கமளித்துள்ளார்.
இந்த மோதல்களுக்கு மத்தியிலும், ஸ்டீவ் ஸ்மித் வெறும் 42 பந்துகளில் மின்னல் வேக சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். வெற்றியைக் கொண்டாட வேண்டிய தருணத்தில், அணியின் இரு முக்கிய வீரர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மனக்கசப்பு ரசிகர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.
