ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் (BBL) டி20 தொடரில், சிட்னி சிக்சர்ஸ் அணியின் ஸ்டீவ் ஸ்மித் செய்த செயலால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், போட்டியின் முடிவில் எதிரணி வீரர்களுடன் கைகுலுக்க மறுத்து அறைக்குள் முடங்கிய சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சிட்னி தண்டர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக ஸ்மித் மற்றும் பாபர் அசாம் ஜோடி களத்தில் இருந்தது. 11-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் (Single) எடுக்க வாய்ப்பு இருந்தும், அடுத்த ஓவரில் ‘பவர் சர்ஜ்’ (Power Surge) எடுக்க வேண்டியிருந்ததால், ஸ்ட்ரைக்கை தக்கவைத்துக்கொள்ள ஸ்மித் அந்த ரன்னை எடுக்க மறுத்துவிட்டார்.
திட்டமிட்டபடி அடுத்த ஓவரை எதிர்கொண்ட ஸ்மித், அந்த ஒரே ஓவரில் 32 ரன்களை விளாசி தனது முடிவைச் சரி என நிரூபித்தார். ஆனால், மறுமுனையில் இருந்த பாபர் அசாம், ஸ்மித்தின் இந்தச் செயலால் தன்னை அவமதித்ததாகக் கருதி மிகுந்த ஆத்திரமடைந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு 47 ரன்களில் ஆட்டமிழந்த பாபர் அசாம், பெவிலியன் திரும்பும் வழியில் எல்லையோரக் குஷன்களை (Boundary cushions) தனது பேட்டால் அடித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். போட்டி முடிந்த பிறகு, சிட்னி தண்டர் அணி வீரர்களுக்கு வழக்கமாக அளிக்கப்படும் கைகுலுக்கலை (Handshake) தவிர்க்கும் பொருட்டு, அவர் தன்னைத் தானே அறையில் பூட்டிக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிக்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் கிரெக் ஷிப்பர்ட் அவரிடம் பேச முயன்றும், பாபர் சமாதானம் அடையவில்லை எனக் கூறப்படுகிறது.
பாபர் அசாமின் இந்த நடத்தைக்கு கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹ் கூறுகையில், “உங்களது உணர்வுகள் எதுவாக இருந்தாலும், அதை வெளியில் காட்டக்கூடாது. இது அணியின் சூழலுக்கு நல்லதல்ல. கைகுலுக்க வராமல் முடங்கியது ஒரு நல்ல முன்னுதாரணம் அல்ல” என்றார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், “அணி விளையாட்டில் சில நேரங்களில் தனிப்பட்ட நபர்களுக்குப் பிடிக்காத முடிவுகளை எடுக்க வேண்டி வரும். ஸ்மித் எடுத்த முடிவு சரியானது என்பதை அவர் அடித்த 32 ரன்களே சொல்கிறது” என்றார்.
ஆடம் கில்கிறிஸ்ட் கூறுகையில், “மைதானத்தில் சிறுவர்கள் பலரும் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, எல்லையோரக் கயிறுகளை அடித்து அதிருப்தியை வெளிப்படுத்தியது ஏமாற்றமளிக்கிறது. பாபர் அசாம் ஒரு சிறந்த வீரர், ஆனால் இத்தகைய செயல்கள் தேவையற்றவை” என விமர்சித்துள்ளார்.
இப்போட்டியில் ஸ்மித் 42 பந்துகளில் அதிரடி சதம் விளாசி தனது அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
