பெங்களூருவில் சினேகா என்ற பெண் பயணித்த ஒரு சாதாரண ஆட்டோ பயணம், இன்று இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஆட்டோ புக் செய்த சினேகாவுக்கு, ஒரு பெண் ஓட்டுநர் ஆட்டோவை ஓட்டி வந்தது பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த ஓட்டுநர் ‘நம்ம யாத்ரி’ செயலி மூலம் பயிற்சி பெற்று, தற்போது சொந்தமாக எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுவது மிகவும் எளிதாக இருப்பதாகவும், இதன் மூலம் மாதம் சுமார் 45,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டி, வாங்கிய கடனில் 2.5 லட்சம் ரூபாயைத் திருப்பிச் செலுத்திவிட்டதாகவும் அவர் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.
தற்போது பெங்களூருவின் கோரமங்கலா பகுதியில் மட்டும் சுமார் 300 பெண் ஓட்டுநர்கள் பணியாற்றி வருவது பலருக்கும் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. சாலையில் செல்லும் போது மற்ற பெண்கள் தங்களுக்குக் கையசைத்து உற்சாகப்படுத்துவதாகவும், பயணிகள் அனைவரும் மிகுந்த மரியாதையுடன் நடத்துவதாகவும் அந்த ஓட்டுநர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சினேகா பகிர்ந்த இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், பெண் ஓட்டுநர்களின் உழைப்பையும், அவர்கள் அளிக்கும் பாதுகாப்பு உணர்வையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
