கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலையைச் சேர்ந்த பவிசங்கர் (33), வேலை இழப்பு மற்றும் கடன் தொல்லை காரணமாக தனது 6 வயது மகள் வாசுகிக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
எர்ணாகுளம் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தார்கள், பவிசங்கருக்கு வேலை இல்லாததால் கடும் நிதி நெருக்கடியில் இருந்துள்ளனர். சம்பவத்தன்று பவிசங்கரின் மனைவி ஸ்னாஷா வேலை முடிந்து இரவு வீடு திரும்பியபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால், போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமி வாசுகி படுக்கையறையில் சடலமாகக் கிடந்தாள்; பவிசங்கர் மின்விசிறியில் பிணமாகத் தொங்கிக்கொண்டிருந்தார். இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் சுமையால் நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
