மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் சிறுமி ஒருவரை காதலித்த சிறுவனை பெண்ணின் குடும்பத்தினர் நிர்வாணமாக்கி வீதியில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையினர் தலையிட்டு சிறுமியை காப்பகத்திலும் சிறுவனை சிறையிலும் அடைத்தனர். ஒரு மாதத்திற்குப் பிறகு விடுதலையான அந்தச் சிறுவன் மாற்றுத்திறனாளியான தனது தாயுடன் வசித்து வந்த நிலையில் அண்மையில் தாயின் மருத்துவச் செலவுக்காக நண்பரைச் சந்திக்கச் சென்றபோது இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

சிறுவன் ஊருக்குள் வந்ததை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் ஆத்திரமடைந்து அவனைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவனது ஆடைகளைக் களைந்து கைகளைக் கயிறால் கட்டி சங்கர்பூர் பகுதியிலிருந்து காவல் நிலையம் வரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த மக்கள் யாரும் சிறுவனைக் காப்பாற்ற முன்வராத நிலையில் காவல்துறையினர் தலையிட்டு அவனை மீட்டனர். இது குறித்து சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.