உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் உற்சாகமூட்டும் வகையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு, அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் அரசு வேலை வழங்கப்படும் என்பதே அந்த அதிரடி அறிவிப்பாகும்.

மேலும், அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்காக 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

மதுரை மண்ணின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பெருமைப்படுத்தும் வகையில், ஏற்கனவே ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ மற்றும் நூலகம் அமைத்துக் கொடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த புதிய அறிவிப்புகள் வீரர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என்று தெரிவித்தார்.

அலங்காநல்லூர் போட்டியில் வெற்றி பெற்ற சிறந்த வீரர் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு கார், டிராக்டர் போன்ற விலையுயர்ந்த பரிசுகளையும் முதல்வர் வழங்கினார்.

தமிழர்களின் அடையாளமான இந்த வீர விளையாட்டைப் பார்க்கும்போது நமக்கெல்லாம் வீரம் வருவதாகவும், காளையர்களைப் பார்க்கும்போது தமிழ் மண்ணுக்குப் பெருமையாக இருப்பதாகவும் தனது உரையில் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.