லக்னோவில் உள்ள லோகியா மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் பிரீதி ராய் (30). இவருக்கும் கோரக்பூரைச் சேர்ந்த மிருத்யுஞ்சய் என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. குடிப் பழக்கத்திற்கு அடிமையான மிருத்யுஞ்சய், அடிக்கடி வரதட்சணை கேட்டு பிரீதியைத் துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மனைவியைப் மிருகத்தனமாகத் தாக்கிய மிருத்யுஞ்சய், தனது மாமனாருக்கு போன் செய்து, “உன் மகள் செத்துவிட்டாள், வந்து எடுத்துக்கொண்டு போ” என்று திமிராகக் கூறிவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

பதறிப்போய் வீட்டிற்கு வந்த தந்தை, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரீதியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்குப் பரிசோதித்த டாக்டர்கள் பிரீதிக்கு ‘மூளைச் சாவு’ (Brain Dead) ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். 5 நாட்களாகச் தீவிர சிகிச்சைப் பிரிவில் மரணத்துடன் போராடிய பிரீதி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.