அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில், தனது 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகன்களைக் கொலை செய்ததாக 35 வயதான இந்திய வம்சாவளிப் பெண் பிரியதர்சினி நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய தந்தை, தனது இரண்டு குழந்தைகளும் மயக்க நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் கிடந்த சிறுவர்களை மீட்டனர். மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்தும் பலனின்றி, குழந்தைகள் இருவரும் அங்கேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக பிரியதர்சினியை போலீசார் கைது செய்து சோமர்செட் கவுண்டி சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டவிரோத ஆயுதத்தை வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு பிராந்திய மருத்துவ பரிசோதகர் அலுவலகம் மூலம் குழந்தைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள காரணம் குறித்து ஹில்ஸ்பரோ நகர போலீசார் மற்றும் சோமர்செட் கவுண்டி வழக்கறிஞர் அலுவலக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.