பொதுவாக ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணிநேரம் தூக்கம் அவசியம் என்கிறது மருத்துவ உலகம். ஆனால், மத்திய பிரதேச மாநிலம் ரேவா (Rewa) மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் மோகன்லால் திவேதி (Mohanlal Dwivedi), இந்த மருத்துவ விதியையே தலைகீழாக மாற்றியுள்ளார்.

கடந்த 1973-ம் ஆண்டு முதல் இன்று வரை ஒரு நிமிடம் கூட தான் தூங்கியதே இல்லை என அவர் கூறும் தகவல் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் வாயடைக்க வைத்துள்ளது.

ஓய்வு பெற்ற இணை ஆட்சியரான (Joint Collector) இவர், தூக்கம் இல்லாததால் தனக்கு எந்தவித உடல் சோர்வோ, கண் வலியோ அல்லது வேலைத்திறன் குறைவோ ஏற்பட்டதில்லை என்கிறார்.

“மற்றவர்கள் தூங்கும் போது நான் புத்தகங்கள் படிப்பேன் அல்லது மொட்டை மாடியில் நடைப்பயிற்சி மேற்கொள்வேன்” என்று கூறும் இவர், தனக்கு உடலில் காயம் ஏற்பட்டால் கூட வலி அவ்வளவாகத் தெரியாது என்று மற்றொரு அதிரடித் தகவலையும் கூறியுள்ளார்.

டெல்லி, மும்பை எனப் பல பெரிய மருத்துவமனைகளில் இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இவருக்குத் தூக்கம் வராததற்கான சரியான காரணத்தைக் கண்டறிய முடியாமல் திணறி வருகின்றனர்.

50 ஆண்டுகளாகக் கண்ணை மூடாமல் சிங்கம் போலச் சுற்றி வரும் இந்த ‘அதிசய மனிதரை’ அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.