இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் படகை, இந்திய வீரர்கள் துரத்திப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரபிக்கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான கப்பல் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, குஜராத் மாநிலம் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகே ஒரு சந்தேகத்திற்கிடமான பாகிஸ்தான் மீன்பிடி படகு இந்திய எல்லைக்குள் நுழைவதைக் கண்டனர்.

இந்தியக் கப்பலைக் கண்டதும், அந்தப் பாகிஸ்தான் படகு தப்பித்துத் தனது நாட்டு எல்லைக்குள் ஓட முயற்சி செய்தது. ஆனால், நமது வீரர்கள் விடாமல் துரத்திச் சென்று அந்தப் படகை இடைமறித்தனர்.

நடுக்கடலில் நடந்த இந்த அதிரடி நடவடிக்கையில், படகில் இருந்த 9 பாகிஸ்தானியர்களைக் கடலோர காவல்படையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

தற்போது அந்தப் படகு மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் குஜராத்தின் போர்பந்தர் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் வெறும் மீன்பிடிக்க வந்தவர்களா? அல்லது ஏதேனும் சதித் திட்டத்துடன் ஊடுருவினார்களா? என்ற கோணத்தில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.