மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பட்டம் பறக்க விடுவது அதிகரித்துள்ள நிலையில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ‘சீன மஞ்சா’ நூலில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பெண் காவலர் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நேரத்தைக் கணக்கிடுவதில் நிலவும் குழப்பத்தால், சிலர் ஜனவரி 14-ம் தேதியும், மற்றவர்கள் ஜனவரி 15-ம் தேதியும் மங்களகரமான நாள் எனக் கருதி பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

பண்டிகை எப்போது கொண்டாடப்பட்டாலும், மக்கள் ஏற்கனவே பட்டம் பறக்கத் தொடங்கிவிட்டனர். இதில் பயன்படுத்தப்படும் கண்ணாடித் துகள்கள் கலந்த ‘சீன மஞ்சா’ நூல், இருசக்கர வாகன ஓட்டிகளின் கழுத்தை அறுத்து உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. இதனைத் தடுக்க இந்தூர் போக்குவரத்து காவல்துறை நூதன முயற்சியைக் கையாண்டுள்ளது.

 

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரின் கீதா பவன் சந்திப்பில் பணியில் இருந்த பெண் போக்குவரத்து காவலர் ஒருவர், சிக்னலில் வாகனங்கள் நிற்கும் போது ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு வழங்கினார்.

“வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.”

“கழுத்தில் ஸ்கார்ஃப் (Scarf) அல்லது கைக்குட்டையைக் கட்டிக் கொள்வது சீன மஞ்சா நூலில் இருந்து கழுத்தைப் பாதுகாக்க உதவும்.”எனப் பாட்டுப் பாடியும், விளக்கமளித்தும் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நர்ஜிஸ் பானோ என்பவரால் ‘எக்ஸ்’ (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த 48 வினாடி வீடியோ, இதுவரை 18,000-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. “நிர்வாகத்தின் பொறுப்பை உணர்ந்து செயல்படும் இந்தப் பெண் காவலருக்கு எனது சல்யூட்” என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். சீன மஞ்சா விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் சுயப் பாதுகாப்பில் அக்கறை காட்ட வேண்டும் என்பதே இந்தக் காவலரின் நோக்கமாக உள்ளது.