சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ராணி. இவர் தனது கணவரை டயாலிஸிஸ் சிகிச்சைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது திடீரென பர்தா அணிந்து வந்த ஒரு இளம்பெண், ராணியைச் சுத்தியலால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராணிக்கு 5 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சினிமா பாணியில் தப்பிச் சென்ற அந்தப் பெண்ணை, சிசிடிவி (CCTV) காட்சிகளை வைத்து எம்.ஜி.ஆர் நகர் போலீஸார் வலைவீசித் தேடினர்.

இதில் தாக்குதலில் ஈடுபட்டது தரமணியைச் சேர்ந்த நித்யா என்பது தெரியவந்தது. நகைக்காக இந்தத் தாக்குதல் நடந்ததா? எனப் போலீஸார் விசாரித்தபோது, நித்யா சொன்ன காரணம் அதிகாரிகளையே அதிரவைத்தது.

நித்யாவின் தந்தையும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், ராணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருமுறை ராணி ஒரு உதவி கேட்க, நித்யா மறுக்கவே… இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ராணி ஆபாசமாகத் திட்டியதாகத் தெரிகிறது.

இந்த அவமானத்தைப் பொறுக்க முடியாமல், கௌரவப் பிரச்சினையாகக் கருதிய நித்யா, தி.நகரில் ஒரு பர்தாவையும் சுத்தியலையும் வாங்கிக் கொண்டு வந்து ராணியைப் பழிவாங்கியுள்ளார்.

ஒரு சாதாரண வாய்த்தகராறு, கொடூரத் தாக்குதலில் முடிந்திருப்பது மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.