அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்பு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கு வருகை தந்த அவர், பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையிலான நட்பு மிகவும் உண்மையானது என்றும், அடுத்த ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வருவார் என்றும் உறுதியளித்துள்ளார்.

பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதோடு, வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதே தனது இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உறவின் முக்கிய மைல்கல்லாக, பாதுகாப்பான செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்கான ‘பாக்ஸ் சிலிக்கா’ கூட்டமைப்பில் இணைய இந்தியாவுக்கு அடுத்த மாதம் அழைப்பு விடுக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை அவர் பகிர்ந்துள்ளார்.

நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை சுமுகமாக பேசித் தீர்த்துக் கொள்ள முடியும் என்று கூறியுள்ள செர்ஜியோ கோர், அமெரிக்காவுக்கு இந்தியாவை விட சிறந்த நட்பு நாடு வேறு எதுவும் இல்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.