தன் மகளை வளர்ப்பதற்காக சுமார் 37 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆண் போலவே வேடமிட்டு வாழ்ந்த ஒரு தாயின் நெஞ்சை உருக்கும் உண்மைச் சம்பவம் இது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பெண்மணி, திருமணமான சில நாட்களிலேயே தனது கணவரை இழந்து தவித்தார்.
அந்தச் சூழலில், ஒரு பெண் தனியாகக் குழந்தையை வளர்ப்பதில் இருந்த சமூகச் சிக்கல்களையும், வேலையிடங்களில் எதிர்கொண்ட கேலி மற்றும் பாதுகாப்பற்ற சூழலையும் கண்டு அவர் அஞ்சினார். தனது பெண் குழந்தையைப் பாதுகாப்பாகவும், எவ்வித இடையூறுமின்றியும் வளர்க்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்திற்காக, அவர் தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ளத் துணிந்தார்.
மேலும் பேச்சியம்மாள் தனது புடவையைத் துறந்து சட்டை மற்றும் கைலிக்கு மாறினார்; தனது பெயரை ‘முத்து’ என்று மாற்றிக்கொண்டார். பல தசாப்தங்களாக முடிதிருத்தும் நிலையங்கள், கட்டுமானப் பணிகள் என ஆண்களுக்குரிய கடினமான வேலைகளைச் செய்து தனது மகளைக் கரைசேர்த்தார்.
இந்நிலையில் தான் ஒரு பெண் என்பதை உலகம் அறியாதவாறு மிக ரகசியமாக வாழ்ந்து வந்த இவருக்கு, தற்போது வயது 57. தனது மகளுக்குத் திருமணமாகிவிட்ட போதிலும், ‘முத்து’ என்ற அடையாளமே தனக்குப் பாதுகாப்பைத் தந்ததாக அவர் உருக்கத்துடன் கூறுகிறார். ஒரு தாயின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை நிரூபிக்கும் இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் அனைவரையும் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
