தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த 16 நாட்களாக அமைதி வழியில் போராடி வரும் ஆசிரியர்களைத் தொடர்ந்து கைது செய்வது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுவதாகவும், குறிப்பாகக் கைது செய்யப்பட்ட 7 நிர்வாகிகள் பற்றி எந்தத் தகவலும் வெளியிடாதது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதி எண் 311-ன் படி ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கத் தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது நிர்வாகத் தோல்வியை மறைக்கக் காவல்துறையைப் பயன்படுத்தி ஆசிரியர்களை அச்சுறுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடுபவர்களின் குரலை அடக்க நினைப்பது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ள அண்ணாமலை, ஆசிரியர் சங்க நிர்வாகிகளை ரகசியமாகக் கைது செய்து வைப்பதன் மூலம் போராட்டத்தை ஒடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

உடனடியாகக் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை அச்சுறுத்தும் திமுகவின் அரசியலுக்குத் தமிழக மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.