“கஞ்சா இல்லாத் தமிழ்நாடு” என மேடைதோறும் முழங்கும் அமைச்சரின் சாயம் வெளுத்துவிட்டதாக அண்ணாமலை தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஒரு பெண், நேற்று முன்தினம் 18-வது முறையாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண், கண்ணகி நகர் திமுக-வின் 196-வது ‘அ’ வட்டத் துணைச் செயலாளராகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர், நேற்று முன்தினம், 18 வது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், தமிழ்நாட்டில் “கஞ்சா நடமாட்டமே இல்லை” என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர்… pic.twitter.com/n8zGKebiZr
— K.Annamalai (@annamalai_k) January 10, 2026
அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன் அந்தப் பெண் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் சிக்கிய ஞானசேகரனுடன் அமைச்சர் இருக்கும் புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியபோது, “பொது இடத்தில் என்னுடன் யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம்” என அமைச்சர் மழுப்பினார்.
இப்போது 18 முறை கைதான கஞ்சா வியாபாரியுடன் இருக்கும் புகைப்படத்திற்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். “திமுக கூடாரம் போதைப்பொருள் வியாபாரிகளின் புகலிடமாக மாறிவிட்டதில் ஆச்சரியமில்லை” என்றும் அவர் தனது பதிவில் காட்டமாக விமர்சித்துள்ளார்.
