வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக 200 தொகுதிகளையும் தாண்டி இமாலய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுடன் உரையாற்றினார். சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், “சொந்தத் தொகுதியான கொளத்தூரில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்; இங்கு வரும்போதெல்லாம் எனக்குத் தனி எனர்ஜி கிடைக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற இந்த நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை, நீங்களே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இன்று எதிர்க்கட்சியான பாஜகவினர் கூட திமுகவினரை போல யாராலும் களப்பணி ஆற்ற முடியாது என வியந்து பாராட்டுகின்றனர். ஏற்கனவே 50 சதவீத தேர்தல் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள பணிகளையும் தொண்டர்கள் தீவிரமாகச் செய்து வருகின்றனர். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முன்னர் கூறியிருந்தேன், ஆனால் உங்கள் உற்சாகத்தைப் பார்க்கும்போது 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று திண்ணமாக மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்” எனத் தொண்டர்கள் மத்தியில் சூளுரைத்தார்.