மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நிலக்கரி ஊழல் பணம் சென்றதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவ் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் (IT Wing) பிரிவுத் தலைவருக்குச் சொந்தமான இடங்களில், கடந்த வியாழக்கிழமை அமலாக்கத்துறையினர் (ED) அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர். பேரணியின் இறுதியில் தொண்டர்களிடையே பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:

“நிலக்கரி ஊழல் மூலம் ஈட்டப்பட்ட பணம் டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களுக்குச் சென்றடைந்துள்ளது. பா.ஜ.க.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி மூலமாக, மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு இந்தப் பணம் போயிருக்கிறது. இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. அமித் ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவ் (Pen Drive) தற்போது என் வசம் உள்ளது. தேவைப்பட்டால் அந்த ஆதாரங்களை நான் பொதுவெளியில் வெளியிடுவேன்.”

தொடர்ந்து பேசிய அவர், “நான் வழக்கமாக எந்த விஷயத்திற்கும் உடனே எதிர்வினை ஆற்றுவதில்லை. ஆனால், யாராவது என்னைத் தூண்டிவிட முயன்றால், நான் அவர்களை அவ்வளவு எளிதில் விடமாட்டேன்” என மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதான மத்திய முகமைகளின் தொடர் சோதனைகள், அம்மாநில அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.