படுக்கையில் சிறுநீர் கழித்ததாகக் கூறி, 5 வயது சிறுமிக்கு உடலில் சூடு வைத்து துன்புறுத்திய வளர்ப்புத் தாயை போலீஸார் கைது செய்தனர். அதாவது நேபாளத்தைச் சேர்ந்த முகமது இம்தியாஸ் என்பவர், கேரளாவில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே, முகமது இம்தியாஸ் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நூர் நாசர் என்கிற ரூபி (35) என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
சம்பவத்தன்று, அந்தச் சிறுமி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சிறுமி அமர முடியாமல் மிகவும் சிரமப்படுவதைக் கண்ட அங்கன்வாடிப் பணியாளர், அவரிடம் விசாரித்தார். அப்போது, தான் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டதாகக் கூறி, தனது வளர்ப்புத் தாய் உடலில் சூடு வைத்ததாகக் கூறி சிறுமி கதறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பணியாளர், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் அளித்தார். உடனடியாக போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், சிறுமியைத் தொடர்ந்து ரூபி துன்புறுத்தி வந்ததும், ஆத்திரத்தில் உடலில் பல இடங்களில் சூடு வைத்ததும் உறுதியானது.
இதையடுத்து, ரூபியைப் போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் தந்தை முகமது இம்தியாஸுக்கும் தொடர்பு உள்ளதா அல்லது அவர் சித்ரவதையைத் தடுக்கத் தவறினாரா என்பது குறித்து போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
