திண்டுக்கல் அருகே பழிக்குப் பழியாக முன்னாள் திமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய நபர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் வெவ்வேறு இடங்களில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஏசுராஜ் (41). இவர் கடந்த 2024-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் மாயாண்டி ஜோசப் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாவார். இந்த வழக்கில் சிறையில் இருந்த ஏசுராஜ், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
ஜாமீனில் வந்த ஏசுராஜை பழிவாங்க ஒரு கும்பல் திட்டமிட்டுப் பின் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று ஏசுராஜ் தனது இருசக்கர வாகனத்தில் ஆர்.எம்.டி.சி. நகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் வாகனத்தை வழிமறித்தது. நிலைதடுமாறி விழுந்த ஏசுராஜை, அந்தக் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
ஏசுராஜ் கொல்லப்பட்ட அதே நேரத்தில், யாகப்பன்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்த மற்றொரு கும்பல், ஏசுராஜின் மனைவி தீபிகாவை (35) ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது. அடுத்தடுத்து கணவன், மனைவி இருவரும் வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டைக் கொலைகளை ஒரே கும்பல் செய்ததா அல்லது தனித்தனி குழுக்கள் திட்டமிட்டு அரங்கேற்றியதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க யாகப்பன்பட்டி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
