ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளின் தடையையும் மீறி இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.

இதனைத் தடுக்க, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய், எரிவாயு மற்றும் பிற எரிபொருட்களை வாங்கும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மீது 500 சதவீத இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கான ‘ரஷ்யா மீதான தடைகள் மசோதா 2025’ (Sanctioning Russia Act of 2025), அமெரிக்க செனட் சபையில் குடியரசுக் கட்சியின் லிண்ட்சே கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ரிச்சர்ட் ப்ளூமெண்டல் ஆகியோரால் கொண்டு வரப்பட்டுள்ளது.

சுமார் 80-க்கும் மேற்பட்ட செனட்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ள இந்த மசோதா, அடுத்த வாரம் வாக்கெடுப்புக்கு வர உள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, மருந்துகள், ஆட்டோமொபைல் பாகங்கள் மற்றும் ஐடி சேவைகளின் விலை பல மடங்கு உயரும்.

இது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக அமையும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே இந்தியா மீதான வரியை டிரம்ப் நிர்வாகம் 50 சதவீதமாக உயர்த்தியுள்ள நிலையில், இந்த 500 சதவீத வரி மிரட்டல் சர்வதேச வர்த்தகத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.