காட்டு உலகில் சிங்கம் தான் ராஜா என்றாலும், ஒரு தாயின் பாசத்திற்கு முன்னால் அந்த பலம் செல்லுபடியாகாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்காவின் செரங்கெட்டி தேசிய பூங்காவில் படமாக்கப்பட்ட இந்த வீடியோவில், புதருக்குள் மறைந்திருந்த பெண் சிறுத்தை ஒன்று, தனது இரண்டு குட்டிகளையும் வேட்டையாட வந்த ஆக்ரோஷமான பெண் சிங்கத்தை கண்டு துள்ளி எழுகிறது. பொதுவாக சிங்கத்தை கண்டால் ஒதுங்கிச் செல்லும் சிறுத்தைகள், இங்கு தனது குட்டிகளின் உயிருக்கு ஆபத்து என்றவுடன் ‘மரண பயத்தை’ மறந்து சிங்கத்துடன் நேருக்கு நேர் மல்லுக்கட்டியது.

மின்னல் வேகத்தில் சிங்கத்தின் மீது பாய்ந்த சிறுத்தை, அதன் கவனத்தை திசைதிருப்பி குட்டிகளை பாதுகாப்பான இடத்திற்கு ஓட வைத்தது. இந்த உயிரைப் பணையம் வைத்த போராட்டத்தின் முடிவில், சிங்கத்தை நிலைகுலையச் செய்த தாய் சிறுத்தை, தனது குட்டிகளுடன் பத்திரமாக தப்பிச் சென்றது. “தாயின் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை” என நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.