தமிழக அரசியலில் 2026 கூட்டணி கணக்குகள் தற்போதே தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளன. அதிமுக தரப்பு தேமுதிக தங்களது கூட்டணியில்தான் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வந்தாலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை எந்தத் தெளிவான பதிலையும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார். கடந்த முறை ராஜ்யசபா சீட் (Rajya Sabha Seat) கைநழுவிப் போனதால் ஏற்பட்ட அதிருப்தியில் இருக்கும் பிரேமலதா, இந்த முறை அதைப்பற்றிய உறுதியான வாக்குறுதி கிடைத்தால் மட்டுமே கூட்டணி என ஒற்றைக்காலில் நிற்பதாகத் தகவல்கள் கசிகின்றன. இதனால், அதிமுகவுடன் அதிகாரப்பூர்வமாக கைகோர்க்காமல் இழுபறி நீடித்து வருகிறது.

​அதே சமயம், சமீபகாலமாக ஆளுங்கட்சியான திமுக-வை கடுமையாக விமர்சிக்காமல் பிரேமலதா மென்மையான போக்கை கடைப்பிடிப்பது அரசியல் நோக்கர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கையை முன்வைக்கும் தேமுதிக, ஒருவேளை திமுக தரப்பில் ராஜ்யசபா சீட் மற்றும் தொகுதிகள் குறித்துச் சாதகமான சிக்னல் கிடைத்தால், அங்குச் செல்லவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள தேமுதிகவின் மாநாட்டிற்குப் பிறகு அல்லது பொங்கலுக்குப் பிறகு, பிரேமலதாவின் இந்த அரசியல் ‘சதுரங்க ஆட்டம்’ ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.