தமிழக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் எந்த நெருக்கடியும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதேபோன்ற ஒரு சிக்கல் அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’ படத்திற்கு ஏற்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற ‘உதய சூரியன் பார்வையிலே’ என்ற பாடல் வரிகள், ஒரு குறிப்பிட்ட அரசியல் சின்னத்தைக் குறிப்பதாகக் கூறி அப்போதைய சென்சார் போர்டு பாடலை மாற்றச் சொல்லி முட்டுக்கட்டை போட்டதாம்.

​”அன்று எம்.ஜி.ஆருக்கே சென்சார் நெருக்கடி இருந்தது; பிறகு பல போராட்டங்களுக்குப் பின் U/A சான்றிதழ் பெற்று படம் வெளியாகி இமாலய வெற்றி பெற்றது” என்று செல்லூர் ராஜூ சுட்டிக்காட்டினார். ‘ஜனநாயகன்’ படமும் அதேபோல அனைத்துத் தடைகளையும் உடைத்து மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கும், எம்.ஜி.ஆரின் அந்த வரலாற்றுச் சம்பவத்திற்கும் இடையே செல்லூர் ராஜூ பாலமிட்டுப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.