பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஒருவர், புதிய உருளைக்கிழங்குகளில் படிந்திருக்கும் அடர்த்தியான மண்ணைச் சுத்தம் செய்ய ஒரு விசித்திரமான ‘தேசி ஜூகாட்’ (Desi Jugaad) முறையைக் கையாண்டுள்ளார்.

தனது வீட்டில் இருந்த வாஷிங் மெஷினின் ரம்மிற்குள் உருளைக்கிழங்குகளைக் கொட்டி, தண்ணீரை நிரப்பி, சில நிமிடங்கள் சுழலவிட்டுள்ளார்.

வெளியே எடுக்கும்போது உருளைக்கிழங்குகள் பளிச்சென்று சுத்தமாக இருந்தன. இதனைப் பெருமையுடன் வீடியோவாகப் பகிர, அது 1.1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலானது.

ஆனால், இந்த ‘டெக்னிக்’ பார்ப்பதற்கு எளிமையாகத் தெரிந்தாலும், இதில் பெரும் ஆபத்து இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தில் ஏற்கனவே படிந்திருக்கும் சோப்புத் தூள் மற்றும் ரசாயனங்கள் உருளைக்கிழங்கிற்குள் ஊடுருவி உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மேலும், உருளைக்கிழங்கிலிருந்து வெளியேறும் அதிகப்படியான மண் மற்றும் சிறு கற்கள் வாஷிங் மெஷினின் வடிகால் குழாய்களை அடைத்து, மோட்டாரையே பாழாக்கிவிடும். “இந்தியா ஆரம்பநிலை ஆட்டக்காரர்களுக்கானது அல்ல” (India is not for beginners) என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ இணையத்தில் நகைச்சுவையாகவும், அதேசமயம் எச்சரிக்கையாகவும் பகிரப்பட்டு வருகிறது.