கர்நாடக மாநிலம், 3 வயது பெண் குழந்தையைத் தன் உடலில் துணியால் கட்டிக்கொண்டு தாய் ஏரியில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் புகார் அளித்துள்ளார். ஹரீஷ் என்பவருக்கும் மதுஸ்ரீ (34) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தன்வி (3) என்ற மகள் இருந்தார். ஹரீஷ் தனது தாய், மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு அனைவரும் ஒன்றாக உணவு அருந்திவிட்டு உறங்கச் சென்றுள்ளனர். மறுநாள் அதிகாலை ஹரீஷ் எழுந்து பார்த்தபோது, மனைவி மதுஸ்ரீயையும் குழந்தை தன்வியையும் காணவில்லை. உறவினர்களுடன் சேர்ந்து கிராமம் முழுவதும் தேடியபோது, வீட்டின் அருகே உள்ள ஏரியில் இருவரும் பிணமாக மிதப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடல்களை மீட்டனர். அப்போது, மதுஸ்ரீ தனது குழந்தையைத் தன்னுடன் சேர்த்து ஒரு துணியால் உடலில் இருக்கமாகக் கட்டியிருந்தார். மேலும் அந்தச் சிறுமி தனது தாயை அணைத்த நிலையிலேயே உயிரிழந்திருந்தது மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களையும், கிராம மக்களையும் கண்கலங்கச் செய்தது.

மதுஸ்ரீ தனது குழந்தையுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், மதுஸ்ரீயின் தாய் ரத்னாவதி, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

“உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குடும்பத் தகராறு காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது தற்கொலையா அல்லது கொலையா என்பது உறுதி செய்யப்படும்” என்று போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.