நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்து துணைவேந்தரிடம் பெற்ற மாணவி ஜீன் ஜோசப்பின் பட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெற்ற இவ்விழாவில், ஆளுநரைப் புறக்கணித்துவிட்டுத் துணைவேந்தரிடம் பட்டம் பெற்ற மாணவியின் செயல் பல்கலைக்கழக விதிகளுக்கு எதிரானது என்றும், அவர் விழா மேடையை அரசியல் களமாக மாற்றியதாகவும் கூறி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல என்று கருத்து தெரிவித்தனர். இருப்பினும், பல்கலைக்கழக விதிகளின்படி இதில் தலையிட முடியாது எனக் குறிப்பிட்டு, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி அதனைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
