திருப்பரங்குன்றம் மலைக்கோயில் கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்தது. இது குறித்துப் பேசிய அமைச்சர் ரகுபதி, கடந்த 100 ஆண்டுகளில் அங்கு தீபம் ஏற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்க வேண்டும் என்ற நடைமுறையைப் போல, வழக்கத்தில் இல்லாத புதிய பழக்கங்களை புகுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பின் மூலம் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் ஆன்மீக மரபுகளை திமுகவினர் தொடர்ந்து அவமதித்து வருவதாகவும், தீபத் திருவிழாவைச் சுடுகாட்டுடன் ஒப்பிட்டுப் பேசியது இந்து மத விரோத மனநிலையை காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கும் திமுகவினருக்குத் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.