ஒரு காலத்தில் இணையத்தையே தன் குரலால் கட்டிப்போட்ட ‘வைரல்’ பாடகி ராணு மொண்டலின் தற்போதைய நிலை ரசிகர்களைக் கண்ணீர் விட வைத்துள்ளது.
ரயில் நிலையத்தில் பாடி, ஒரே இரவில் உலகப் புகழ்பெற்றவர் ராணு மொண்டல். இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷாமியா மூலம் பாலிவுட்டில் ‘தேரி மேரி கஹானி’ (Teri Meri Kahaani) என்ற பாடலைப் பாடி, வறுமையில் இருந்து வசதிக்கு வந்த ஒரு மிகச்சிறந்த உதாரணமாகப் பார்க்கப்பட்டார்.
ஆனால், அந்தப் புகழ் நீண்ட காலம் நீடிக்கவில்லை. மெல்ல மெல்லத் திரையுலகை விட்டு மறைந்த அவர், மீண்டும் பழைய நிலைக்கே தள்ளப்பட்டுள்ளார்.
தற்போது யூடியூபர் சிராஜ் ஆஷு பச்சன் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ராணு மொண்டல் தெருக்களில் மிகவும் பரிதாபமான நிலையில் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு அல்சைமர் (Alzheimer’s) நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்.
அந்த வீடியோவில், தான் பாடிய அதே ஹிட் பாடலை அவர் முணுமுணுக்கும் காட்சிகள் பார்ப்பவர்களின் இதயத்தை நொறுங்கச் செய்கிறது.
அவருக்கு வீடு இருந்தாலும், நிலையான வருமானம் இல்லாததால் மீண்டும் தெருவுக்கே வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கோடிகளில் சம்பாதித்த ஒரு திறமைசாலி, இன்று நோய் பாதிப்பால் அடையாளம் தெரியாத நிலைக்கு மாறியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
