தென்காசி மாவட்டம் கழுகுமலை அருகே, இன்ஸ்டாகிராமில் வேறொருவருடன் பழகியதாக ஏற்பட்ட ஆத்திரத்தில், பயிற்சி காவலர் பள்ளி மாணவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதலன் போலீசில் சரணடைந்தார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் உமா (19). இவர் தென்காசி மாவட்டம் பாறைப்பட்டியில் உள்ள ஒரு தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் பயின்று வந்தார். அப்போது, அதே பள்ளியில் பயின்ற தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா, கொளக்காட்டான்குறிச்சியைச் சேர்ந்த மாரிச்சாமி மகன் ராஜேஷ் (25) என்பவருடன் உமாவிற்குப் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. கடந்த 8 மாதங்களாக இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உமா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேறொரு நபருடன் அடிக்கடி பேசி வந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக ராஜேஷுக்கும் உமாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.
நேற்று உமா தனது பயிற்சி கட்டணத்தைச் செலுத்துவதற்காகப் பள்ளிக்கு வந்துள்ளார். இத்தகவலை அறிந்த ராஜேஷ், அவரிடம் சமாதானம் பேசுவதாகக் கூறித் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் மாலையில் உமாவைத் தனது இருசக்கர வாகனத்தில் கஸ்தூரிரெங்கபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
காட்டுப்பகுதியில் வைத்து மீண்டும் இன்ஸ்டாகிராம் விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த ராஜேஷ், உமாவைக் கடுமையாகத் தாக்கி, அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதில் உமா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, ராஜேஷ் உடனடியாககாவல் நிலையத்திற்குச் சென்று நடந்த விபரங்களைக் கூறி சரணடைந்தார். அங்கிருந்து கழுகுமலை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, ராஜேஷ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
போலீஸ் விசாரணையில் ராஜேஷ் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு: நாங்கள் கடந்த 8 மாதங்களாகக் காதலித்து வந்தோம். இடையில் அவள் இன்ஸ்டாகிராமில் வேறொருவருடன் தொடர்பில் இருந்ததால் எங்களுக்குள் விரிசல் ஏற்பட்டது. நேற்று அவளைத் தனியாக அழைத்துச் சென்று அதுகுறித்து கேட்டபோது மீண்டும் தகராறு ஏற்பட்டது. அந்த ஆத்திரத்தில் கழுத்தை நெரித்தேன்.
அவள் மயங்கியதும் பயந்துபோய் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தேன். ஆனால் அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். அவளைக் கொல்ல வேண்டும் என்பது எனது நோக்கமல்ல, ஆத்திரத்தில் செய்த செயலால் இப்படி ஆகிவிட்டது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
