1. ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் புகழ்பெற்ற டோயோசு மீன் சந்தையில் புத்தாண்டையொட்டி நடைபெற்ற முதல் ஏலத்தில், 243 கிலோ எடை கொண்ட ராட்சத ‘புளுபின் டுனா’ மீன் வரலாறு காணாத விலைக்கு விற்பனையாகி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓமா கடற்பகுதியில் பிடிபட்ட இந்த அபூர்வ வகை மீன், அதன் தனித்துவமான சுவைக்காக ‘கடலின் கருப்பு வைரம்’ என அழைக்கப்படுகிறது.

கடும் போட்டிக்கு இடையே நடைபெற்ற இந்த ஏலத்தில், ‘சுஷி ஜான்மாய்’ என்ற பிரபல உணவகச் சங்கிலியின் உரிமையாளர் கியோஷி கிமுரா, சுமார் ரூ.28 கோடி (510 மில்லியன் யென்) வழங்கி அந்த மீனைத் தட்டிச் சென்றார். இதன் மூலம் கடந்த ஆண்டு எட்டப்பட்ட ரூ.11 கோடி என்ற சாதனையை முறியடித்து, புத்தாண்டின் முதல் ஏலத்திலேயே புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஜப்பானில் புத்தாண்டு ஏலத்தில் அதிக விலைக்கு மீன் வாங்குவது அதிர்ஷ்டத்தைத் தரும் என்பது அங்குள்ள வணிகர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.