உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டச் சிறையில் புத்தாண்டையொட்டி சிறை அதிகாரிகள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த வேளையில், இரண்டு கைதிகள் சுமார் 22 அடி உயரமுள்ள சிறைச் சுவரை ஏறி குதித்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் வழங்கப்பட்ட போர்வைகளை ஒன்றோடு ஒன்று இணைத்து கயிறு போலத் தயாரித்த கைதிகள், அதன் உதவியுடன் உயரமான சுவரை எளிதாகக் கடந்து தப்பித்துள்ளனர்.

 

மறுநாள் காலை வழக்கமான கைதிகள் எண்ணிக்கையின் போது இரண்டு பேர் குறைவாக இருப்பதைக் கண்ட சிறை நிர்வாகம், சுவரில் போர்வைகள் தொங்குவதைப் பார்த்து அவர்கள் தப்பியோடியதை உறுதி செய்தது. தப்பியோடியவர்களில் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழும், மற்றொருவர் ஆயுதச் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களின் மெத்தனமே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று கூறி, சிறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகளை மாவட்ட நிர்வாகம் அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.

தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் சிறைத்துறையின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.