“உண்மையான காதல் ஒருபோதும் தோற்பதில்லை” என்பதற்கு இலக்கணமாக, இளமையில் பிரிந்த காதலர்கள் 60 வயதிற்குப் பிறகு திருமண பந்தத்தில் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் முண்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் தனது வாலிப பருவத்தில் ரஷ்மி என்ற பெண்ணைக் காதலித்தார். தொடக்கத்தில் தயங்கியவர், பின்னர் தனது காதலைத் தெரிவித்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக ரஷ்மிக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர்.
காதல் கைகூடாத விரக்தியில் ஜெயபிரகாஷ் வெளிநாடு சென்றார். காலப்போக்கில் இருவருமே வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளுடன் தங்களது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தனர்.
வாழ்க்கை சீராகச் சென்று கொண்டிருந்த நிலையில், ரஷ்மியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பும், ஜெயபிரகாஷின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பும் காலமானார்கள். துணையை இழந்த இருவரும் தங்களது குழந்தைகளே உலகம் என வாழ்ந்து வந்தனர். ரஷ்மி தனது மன அழுத்தத்தைக் குறைக்க குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
மறுமணம் செய்ய முடிவெடுத்த ஜெயபிரகாஷ், பெண் தேடி வந்த நிலையில் தற்செயலாக ரஷ்மி நடித்த குறும்படம் ஒன்றைப் பார்த்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பழைய காதலியைத் திரையில் கண்ட அவர், நெகிழ்ச்சியில் ஆழ்ந்தார். பெரும் முயற்சிக்குப் பிறகு, ரஷ்மியின் மகளின் தொலைபேசி எண்ணைப் பெற்று அவரைத் தொடர்பு கொண்டார்.
பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டபோது, இருவருமே துணையை இழந்திருப்பது தெரியவந்தது. அப்போது, “நாம் ஏன் மீண்டும் இணையக் கூடாது?” என்ற விருப்பத்தை ஜெயபிரகாஷ் முன்வைத்தார்.
ரஷ்மி இதுகுறித்து தனது மகள் மற்றும் மருமகனிடம் பேசினார். அவர்களின் முழுச் சம்மதத்துடன், இந்த முதிர்ந்த வயதுத் திருமணத்திற்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கொச்சியில் மிகவும் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு, ரஷ்மியின் மகள் தனது தாயின் திருமணப் புகைப் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “தங்களது பெற்றோரின் திருமணத்தை முன்னின்று நடத்தும் அதிர்ஷ்டம் எந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கும்?” என்று அவர் பதிவிட்டுள்ள நெகிழ்ச்சியான வாசகம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளமையில் நழுவிப்போன காதல், முதுமையில் கைகூடியிருப்பது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
