தமிழகத்தில் தைப் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கிய நிலையில், வரும் ஜனவரி 8-ஆம் தேதி முதல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு  கரும்பு இடம்பெறும். இதற்காக மட்டும் ரூ.248.66 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, இம்முறை பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடுதலாக ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக இத்திட்டத்திற்கான மொத்த செலவினம் ரூ.6,936.17 கோடியாக உயர்ந்துள்ளது. எளிய மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் கூட்ட நெரிசலின்றி பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காக, ‘டோக்கன்’ முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர். நாளைக்குள் (ஜனவரி 7) டோக்கன் வழங்கும் பணியை முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் கடைக்குச் சென்று பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். வரும் ஜனவரி 8-ஆம் தேதி (நாளை மறுநாள்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பரிசுத் தொகுப்பு மற்றும் வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் விநியோகம் நடைபெறும்.

பரிசுத் தொகுப்பு விநியோகத்தின்போது எவ்வித அசம்பாவிதங்களும் புகார்களும் எழாமல் இருக்க உணவுப் பொருள் வழங்கல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது: ஒரு நாளைக்கு 200 முதல் 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும்.

பச்சரிசி, சர்க்கரை ஏற்கனவே கடைகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு நாளைக்குள் கடைகளைச் சென்றடைய வேண்டும். மேலும்  உணவுப் பொருட்களுடன் தமிழக அரசின் இலவச வேட்டி-சேலையையும் சேர்த்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.