தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் ‘அதிகாரப் பகிர்வு’ குறித்த விவாதம் மீண்டும் வெடித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் சமூக வலைதளப் பதிவிற்கு, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கடுமையான பதிலடியைத் தந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “தங்கள் கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும்” என அறிவித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:
“தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி வாக்கு வங்கி உள்ளது. இப்போது வெறும் இடப்பகிர்வு பற்றி மட்டும் பேசினால் போதாது; அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.”
இதன் மூலம், வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் காங்கிரஸுக்கும் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பதை அவர் மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார்.
மாணிக்கம் தாகூரின் இந்தப் பேச்சுக்கு திமுக தரப்பிலிருந்து உடனடி எதிர்வினை வந்துள்ளது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:
“மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் அல்ல, தேசியத் தலைவரும் அல்ல. கூட்டணி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து அந்தந்தக் கட்சித் தலைவர்கள்தான் பேச வேண்டும். அவர் எதையாவது சொல்ல விரும்பினால் தனது கட்சித் தலைமைடம் பேசியிருக்க வேண்டும். அதை விடுத்து பொதுவெளியில் பேசுவது முறையல்ல.
இவரைப் போன்ற நபர்களாலேயே காங்கிரஸ் கட்சி நல்ல நிலையில் இல்லை. இவர்களை மக்கள் திமுக எதிர்ப்பாளர்கள் என்று பார்க்க மாட்டார்கள், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் ‘காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள்’ என்றே பார்ப்பார்கள்.
கூட்டணி குறித்துப் பேச காங்கிரஸ் தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் மாணிக்கம் தாகூர் இடம் பெறவில்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது” என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
விஜய்யின் ‘ஆட்சிப் பங்கு’ அறிவிப்பிற்குப் பிறகு, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிலும் அமைச்சரவை இடம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளதை மாணிக்கம் தாகூரின் பதிவு உறுதிப்படுத்தியுள்ளது. இது தேர்தல் நேரத்தில் திமுகவிற்குப் புதிய சவாலை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
