திருச்சியில் தங்கியுள்ள பாஜக மூத்த தலைவர் அமித்ஷா, இன்று இரண்டாவது நாளாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் தமிழக சட்டசபைத் தேர்தல் கூட்டணி குறித்து மிக முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, பிரிந்து கிடக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்றும், ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் பாமக-வையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமித்ஷா பிடிவாதமாகக் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
”இவர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு வந்தால்தான் கூட்டணி வலுவாக இருக்கும்” என்று அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் இந்த ‘மெகா கூட்டணி’ ஐடியாவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சம்மதிக்குமா என்பதுதான் இப்போது பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்தச் சந்திப்பின் மூலம் தமிழக அரசியலில் ஒரு பெரிய கூட்டணி மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
