புதுக்கோட்டையில் நடைபெற்ற நயினார் நாகேந்திரனின் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ நிறைவு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணி அமைத்து தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் என உறுதிப்படத் தெரிவித்தார்.
திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஒரே நோக்கம் தனது மகன் உதயநிதியை முதல்வராக்குவது மட்டுமே என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், திமுக அரசு இந்துக்களின் சமய உரிமைகளைப் பறிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழர்களுக்கும் அளித்து வரும் முக்கியத்துவத்தைப் பட்டியலிட்டார். ஐ.ஏ.எஸ் தேர்வுகளைத் தமிழில் எழுத அனுமதித்தது, ரயில் நிலையங்களில் தமிழ் அறிவிப்புகள், வாரணாசியில் பாரதி இருக்கை மற்றும் திருக்குறளை 13 மொழிகளில் மொழிபெயர்த்தது எனப் பல சாதனைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி பிரதமர் தமிழ்ப் பெருமையை உலகறியச் செய்துள்ளதாகப் பாராட்டிய அவர், சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் திமுகவை மக்கள் வரும் தேர்தலில் புறக்கணிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
