கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் 13 வயது சிறுமியை ஒரு வாரத்திற்கும் மேலாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுவர்களைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இருவரும் தினசரி வேலைக்குச் செல்பவர்கள். அவர்கள் பகல் நேரத்தில் வீட்டில் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அந்தச் சிறுமிக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

இது குறித்து ஹுப்பள்ளி-தர்வாட் காவல் ஆணையர் என். சசிகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிறுமியின் புகாரின் பேரில் 14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறார்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ (POCSO) மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள், இச்சம்பவத்தை ஆபாச வீடியோ எடுத்திருப்பதாகவும், அதை வெளியே சொல்லிவிடுவோம் எனச் சிறுமியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், அந்தச் சிறுவர்களின் மொபைல் போன்களைப் பறிமுதல் செய்துள்ள போலீஸார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று கடந்த ஜனவரி 1-ஆம் தேதி, 4 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் போலீஸார் என்கவுன்டர் மூலம் காலில் சுட்டுப் பிடித்தனர்.

கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி, வயலுக்குச் சென்ற 15 வயது தலித் சிறுமியைச் சிவம் யாதவ் என்ற நபர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் சூழலில், வீட்டில் தனியாக இருக்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இச்சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.