உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஷதாப் ஜகாதி, “10 ரூபாய் பிஸ்கட்” என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். தற்போது அவர் ஒரு கடுமையான சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருடன் இணைந்து வீடியோக்களில் நடிக்கும் பெண் கலைஞரின் கணவரான குர்ஷித் (என்கிற சோனு), ஷதாப் ஜகாதி மீது பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
மேலும் ஷதாப் மற்றும் தனது மனைவி ஆகிய இருவரும் இணைந்து தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டுவதாகவும், ஷதாப் தனது பண பலத்தைக் காட்டி மிரட்டுவதாகவும் கூறி அவர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை அந்தப் பெண் கலைஞர் முற்றிலுமாக மறுத்துள்ளார். தனது கணவர் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், குடும்பச் செலவுகளுக்காகவே தான் ஷதாப் ஜகாதியுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது ஷதாப் வெறும் முதலாளியாகத் தனக்கு வேலைக்கான ஊதியத்தை மட்டுமே வழங்குவதாகவும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள கொலைச் சதி குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இஞ்சோலி போலீசார் இரு தரப்பு புகார்களையும் பெற்றுக்கொண்டு, இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
