வேலூர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கஞ்சா புழக்கமும் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின், தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மத்திய அரசு மீது பழி போடுவதாகச் சாடினார்.

மேலும், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் புத்தாண்டு பரிசாகக் கைது நடவடிக்கையே கிடைத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை அகற்ற மக்கள் முடிவெடுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, அக்கட்சியினர் டெல்லிக்கும் திமுகவுக்கும் “ஜால்ரா” போடுவதிலேயே குறியாக இருப்பதாகவும், மக்களுக்காகப் பேச அங்கு யாரும் இல்லை என்றும் கூறினார்.

காங்கிரஸ் ஒரு அழிந்து வரும் கட்சி என்று குறிப்பிட்ட அவர், ஒருவேளை நடிகர் விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், ப.சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் இணைவார் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் கூறினார்.