தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். வைகோவின் பாதயாத்திரை குறித்துப் பேசிய அவர், போதைப் பழக்கத்தை ஒழிக்க விரும்பினால் அந்தப் பயணம் அறிவாலயத்தை நோக்கித்தான் செல்ல வேண்டும் என்று சாடினார்.
போதைப் பொருட்களை விற்பவர்களே திமுக கூட்டணியில் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், மத்திய அரசு போதைப்பொருள் தடுப்பில் தீவிரமாகச் செயல்பட்டாலும், தமிழகத்தில் ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவுக்குக் கடத்தப்படுவதைக் கூடத் தடுக்க முடியவில்லை என முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளை விமர்சித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழப்பங்கள் மற்றும் தமிழகத்தின் கடன் சுமை குறித்த அக்கட்சித் தலைவர்களின் கருத்துகள், திமுக கூட்டணிக்குள் இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாகத் தமிழிசை தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், அனுபவம் மிக்க பாஜகவுடன் அனுமானத்தில் அரசியல் செய்பவர்கள் இணைந்தால் நல்லது, இல்லையென்றாலும் கவலையில்லை எனக் குறிப்பிட்டார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியான வெற்றியைப் பெற்று, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
