பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கைதிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில், உதவி சிறை அலுவலர் காயமடைந்தது சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகளான பொன்னை பாலு, மணிவண்ணன் மற்றும் புதார் அப்பு ஆகியோரிடையே இன்று திடீர் மோதல் ஏற்பட்டது. தங்களை ஜாமினில் எடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இது கைகலப்பாக மாறியது.

கைதிகளுக்கு இடையே நடந்த இந்த மோதலைத் தடுத்து நிறுத்த உதவி சிறை அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் உதவி சிறை அலுவலர் திருநாவுக்கரசு பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு, சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவம் குறித்து புழல் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மோதலில் ஈடுபட்ட கைதிகள் மற்றும் அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிறைக்குள் நடந்த இந்த மோதல் காரணமாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி மோதலில் ஈடுபட்ட கைதிகள் மீது சிறை நிர்வாகம் சார்பில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.