சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் ஒரு காணொளியில், வணிக வளாகத்தில் உள்ள பொம்மை கடைக்குள் நுழைந்த தெருநாய் ஒன்று, தனக்கு பிடித்தமான ஒரு பொம்மையைக் கவ்விக்கொண்டு மகிழ்ச்சியுடன் ஓடும் காட்சி வைரலாகி வருகிறது. கடையில் பணியாற்றும் பெண் அந்த பொம்மையை மீட்க முயன்றபோதும், அந்த நாய் பிடிவாதமாக விளையாடி அதனைத் தர மறுத்தது.

 

இந்த சுவாரசியமான காட்சியைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாகத் தங்களுக்குள் பணத்தைத் திரட்டி அந்த பொம்மைக்கான விலையைச் செலுத்தி அதனை அந்த நாய்க்கே பரிசாக வழங்கினர். பொம்மை தனக்கே சொந்தமானதை உணர்ந்த அந்த நாய், உற்சாகத்துடன் துள்ளிக் குதித்து விளையாடிய காட்சி பார்ப்பவர்களின் கண்களில் ஈரத்தை வரவழைத்தது.

இது தொடர்பான காணொளி ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில், அந்த நாய் விரைவில் ஒரு நல்ல குடும்பத்தாரால் தத்தெடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் தங்கள் விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றனர்.