நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் இப்படம் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பட தயாரிப்பு நிறுவனம் பல்வேறு விளம்பரங்களைச் செய்து வருகிறது.
இருப்பினும், படத்தின் விளம்பரங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகைப்படத்தையும், 1952-இல் வெளியான அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பராசக்தி’ படத்தின் காட்சிகளையும் பயன்படுத்துவதற்கு நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்திலிருந்தே இத்தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் சிவாஜி கணேசன் கையில் இருக்கும் தீப்பந்தத்தை சிவகார்த்திகேயன் பெறுவது போன்ற காட்சி ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல’ இருப்பதாக அந்த அமைப்பு தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதியின் புரட்சிகர வசனங்களால் தமிழ்த் திரையுலக வரலாற்றைத் திசைதிருப்பிய ‘பராசக்தி’ என்ற உன்னதமான பெயரை அபகரித்ததோடு நில்லாமல், வணிக நோக்கத்திற்காக சிவாஜியின் பிம்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என அந்த அறிக்கை சாடியுள்ளது. பிரபு மற்றும் விக்ரம் பிரபு என நடிகர் திலகத்தின் வாரிசுகள் இன்றும் திரையுலகில் வெற்றிகரமாக இயங்கி வரும் சூழலில், சிவகார்த்திகேயனை அவரது வாரிசு போல முன்னிறுத்த யாருக்கு அதிகாரம் உள்ளது என்றும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மனசாட்சியின்றி செயல்படும் படக்குழுவின் இந்தச் செயலால் லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளதாகவும், சுயலாபத்திற்காக முன்னோர் உழைப்பைச் சுரண்டும் இப்போக்கை நடிகர் திலகத்தின் ஆன்மா மன்னிக்காது என்றும் அந்த அறிக்கையில் ஆவேசமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
