விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் சர்பராஸ் கான் சதம் விளாசி அசத்தினார்.

ஜெய்ப்பூரில் டிசம்பர் 31-ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 444 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் 46 ரன்களும், ஹர்டிக் டாமோர் 53 ரன்களும் எடுத்தனர்.
குறிப்பாக, சகோதரர்களான சர்பராஸ் கான் மற்றும் முஷீர் கான் ஜோடி கோவா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.

முஷீர் கான் 60 ரன்கள் எடுக்க, மறுமுனையில் அதிரடி காட்டிய சர்பராஸ் கான் 157 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் உயர முக்கியக் காரணமாக இருந்தார். இவர்கள் இருவரும் 3-ஆவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர்.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சர்பராஸ் கான், தனது தம்பியுடன் இணைந்து விளையாடுவது குறித்து நெகிழ்ச்சியான சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்:
“ஒரே போட்டியில் நானும் எனது தம்பி முஷீர் கானும் சதமடித்து, மைதானத்தில் ஒன்றாகப் பேட்டை உயர்த்த வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கனவு. ரஞ்சிக் கோப்பையில் அது நிறைவேறவில்லை, இன்றும் முஷீர் சதமடிப்பார் என எதிர்பார்த்தேன். அது விரைவில் ஒருநாள் நடக்கும் என நம்புகிறேன்.”

மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வைத்துள்ளோம். களத்தில் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது குறித்தும், ஆட்டத்தின் போக்கை மாற்றுவது குறித்தும் அடிக்கடி ஆலோசிப்போம். சில நேரங்களில் முஷீர் எனக்கு அறிவுரை சொல்லும்போது நான் கோபப்படுவேன், ஆனால் அவரது ஆலோசனைகளை நான் ஒருபோதும் அலட்சியப்படுத்துவதில்லை.

இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்வது கடினம் என்பதால், அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்,” என்றார். 445 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய கோவா அணி, மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.